குதிரை பேர சர்ச்சை: தொடரும் திமுக வெளிநடப்பு!

சென்னை,

டப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க, எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து, சட்டசபையில் விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்து வருகிறது.

குதிரை பேர விவகாரம் குறித்து, விசாரணை செய்ய கவர்னர் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அதுகுறித்து விவாதிக்க திமுக கோரியது.

ஆனால், திமுகவின் கோரிக்கையை ஏற்க சபாநாயர் மறுத்துவிட்டார். இதையடுத்து  திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி  சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏக்களிடம்  நடந்த குதிரை பேர விவகாரத்தில் ஆளுநரின் கடிதத்தை படித்துக் காட்ட சபாநாயகர் தனபால் மறுத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இருப்பினும் ஆளுநரிடம் இருந்து வரும் உத்தரவுகளை சட்டப்பேரவையில் படித்துக் காட்டுவது மரபு என்பதைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் சபாநாயகரின் விளக்கம் திருப்தி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார்.

இதனையடுத்து திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.