எம்எல்ஏக்களுக்கு பணம்: சிபிஐ விசாரணை தேவை! திருநாவுக்கரசர்

சென்னை,

டப்பாடி ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டனர். தற்போது அதற்கான ஆதாரம் வெளியாகி சர்சசையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை அருகே காஞ்சிபுரத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும்,  அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்து இருந்தது. தற்போது மன்னார்குடி கோஷ்டியுடன்  சேர்த்து அதிமுக  4-வது அணியாக பிளவுபட்டுள்ளது என்றார்.

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பணம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆந்திர அரசு விதிமுறைகளை மீறி கொசஸ்தலை ஆற்றில்  தடுப்பணை கட்டி வருகிறது.இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும்,  இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.,

தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, ஆந்திர அரசு தடுப்பனை கட்டுவதற்கு தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராஜஸ்தானில் உரிய ஆவணங்களுடன் மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது பா.ஜனதா ஆதரவாளர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.