சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி,  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியானது. அதற்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில்  புதிய வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தனி  நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

மேலும், தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என நம்புகிறேன் என்று நீதிபதி கூறினார்.