விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால்.
இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரம்யா என்பவர் மீது பணம் கையாடல் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், 2015-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும்,சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய TDS தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் TDS தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பணத்தைப் பரிமாற்றம் செய்து ரம்யா மோசடி செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரம்யா மோசடி செய்த தொகை சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், அதையும் தாண்டி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 28-ம் தேதி அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம் தொழிலாளர்களுக்குக் கட்டவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் டிடிஎஸ் தொகையைக் கட்டவில்லை என விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
ஹரிகிருஷ்ணனின் புகாரைப் பெற்ற போலீஸார் அதுகுறித்து விஷால் அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலாளர் அளித்த ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள பெண் கணக்காளர் ரம்யா மீது ஐபிசி 408 (கணக்காளர் அல்லது அலுவலக ஊழியராக இருந்து நம்பிக்கை மோசடி செய்தல்) , 420 (நம்பிக்கை மோசடி), 468 (ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டதை உண்மையானது என உபயோகப்படுத்துதல்) ஆகிய 4 பிரிவுகளில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவான ரம்யாவைத் தேடி வருகின்றனர்.