கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி:
கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைபொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல், தென்மேற்கு பருவமழை கனமழை கொடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் மேற்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா மாநிலங்களையொட்டிய கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.