சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒருசில நாட்கள் மட்டுமே சென்னையில் மழை பெய்துள்ளது. இதற்குள் ஆங்காங்கே உள்ள சாலைகள் பெயர்ந்தும், சிதறியும், குண்டும் குழியுமாக மாறி பொதுமக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மாநில அரசு, தற்போது உடனடி நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனிமேல் சாலை அமைக்கும்போது மழைக்கு சிதறாதவாறு, செம்மையாக அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

சென்னையில் சமீப காலமாக பெய்து வரும் சிறுசிறு மழைகள் காரணமாகவும், மின்சார வயர் கேபிள்கள் சாலையை தோண்டி புதைப்பது, கழிவுநீர் மற்றும் மழைநீர் சேகரிப்புக்காக சாலைகள்  அமைத்து வருவதாலும், தோண்டப்பட்ட சாலைகளை சரிவர மூடாமல் விட்டு விடுவதாலும், சுமார் 90 சதவிகித சாலைகள் சேதமாகவே காணப்படுகின்றன.

உள்ளாட்சி அதிகாரிகள் நீர்வழங்கல், தவறான வடிவமைப்பு மற்றும் புயல் நீரை வடிகட்டுவதில் தாமதம் ஆகியவை பல நீளங்களின் மோசமான நிலைக்கு காரணங்களாகக் குறிப்பிடுகின்றன.

சென்னையில் மட்டும் சுமார்  471 பஸ் வழித்தடங்களில் 350க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் சுமார்  60% க்கும் மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பது தெரியாமல், குண்டும் குழியுமான சாலையில் விழுந்து எழுவது வாடிக்கையாகி வருகிறது… குறிப்பாக இரு சக்கர வாகனத்தின் பில்லியனில் அமர்ந்து பயணிக்கும் பெண்கள் சாலையில் ஏற்பட்டுள்ள மரண குழியால், வாகனங்களில் இருந்து விழுந்து, காயம் படும்வதும் தொடர்கதையாகி வருகிறது.

மரண பயத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சாலைகளின் சேதத்துக்கு யார் காரணம்? சாலைப்பணிகள் நடைபெறும் போது, அதை கண்காணித்த  நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் குறட்டைவிட்டுக்கொண்டு இருப்பதும், காண்டிராக்டர்களை கண்டிக்க முடியாத முதுகெலும்பற்ற அதிகாரிகளுமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் பல சாலைகளில் மழை காரணமாக  மரண பயணத்தை ஏற்படுத்தியுள்ள மரணக்குழிகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வட சென்னை பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த பகுதியில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதுபோல, சென்னையின் பிரதான சாலைகளான எத்திராஜ் சாலை, அண்ணா சாலை உள்பட பல முக்கிய சாலைகளும் சேதமடைந்து உள்ளன.

மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலை வழியாக காமராஜர் சசாலை செல்லும் ரோடு கடுமையாக மோசமடைந்து உள்ளது.  அதுபோல சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலும், ஸ்டான்லி மருத்துவமனை செல்லும் சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றனர்.

கோத்தாரி சாலை, எம்.ஜி.ஆர் சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை, பி.எஸ். சிவசாமி சலை, நெல்சன் மாணிக்கம் சாலையும் வெகுவாக சேதமடைந்துள்ளது. அதுபோல தரமணி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளிலும் சாலைகள் கடுமையாக சேதடைந்து உள்ளன.

மதுரவாயல் அருகிலுள்ள பூந்தமல்லி ஹை ரோட்டின் (ஈ.வி.ஆர் பெரியார் சாலை) மற்றும் அதன் தொடர்ச்சியான சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை வேலப்பஞ்சாவடியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்தே காணப்படுகிறது.‘

இதுகுறித்து கூறும் அப்பகுதி பொதுமக்கள்,  “பல ஆண்டுகளாக, சாலைகள் பல்வேறு பயன்பாடுகளால் தோண்டப்பட்டு, அவை சரியான முறையில் மூடப்படாததால், தற்போது  மோசமான நிலையில் உள்ளன என்று தெரிவித்து உள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். புதிய சாலைகள் அமைப்பதற்கோ அல்லது குழிகளை நிரப்பு வதற்கோ அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குடியிருப்பாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  புகார் கூறுகின்றனர்.

ஆனால், இதுகுறித்து கூறியுள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர்,  “சேதமடைந்த சாலைகளை செப்பனிடுவதற்கான டெண்டர்களை சென்னை கார்ப்பரேஷன் மேற்கொண்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

சாலைகள் சேதம் அடைவது குறித்து கூறியுள்ள க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையில் நிறைய கனரக வாகனங்களை செல்வதால் சாலைகள் விரைவில் சேதமடைந்து விடுகிறது. அதை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (என்.எச்.ஏ.ஐ)  தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 484 உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டுப் பணிக்காக அரசு ரூ.895 கோடி ஒதுக்கி உள்ளதாக வேறு அறிவித்தது. நபார்டு வங்கி உதவியுடன் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

ஆனால், இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சாலை அமைப்பதில் தகிடுதத்தம் நடைபெறுவதே சிறு மழைக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவில் சாலைகள் சேதமடைவதாக குற்றம் சாட்டப்படுகிறது.