டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந்தேதி தொடங்கி  அக்டோபர் 1ந்தேதி  வரை நடைபெறும் என தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவல் காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை யின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்துவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிகையுடன்,  கூட்டத் தொடரை நடத்துவதற்கான  விரிவான பாதுகாப்புகள் நடைபெற்ற வருகின்றன.  சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் உறுப்பினர் உட்காரும் வகையில் இருக்கைக்கான மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும் என்று தெரிகிறது.

அதன்படி அவை நடவடிக்கையின்போது,  மாநிலங்களவை உறுப்பினர்களில்,  60 உறுப்பினர்கள் சேம்பரிலும், 51 பேர் மாநிலங்களவையின் கேலரிகளிலும், மீதமுள்ள 132 பேர் மக்களவை சேம்பரிலும் அமர்வார்கள் என்று தெரிவித்துள்ளது. அதுபோல, மக்களவை செயலகமும் இருக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து,  நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்த விடுப்பு இல்லாமல் தொடர்ந்து இயங்க இருப்பதாகவும்,  18 அமர்வுகள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுதொடர்பான தேதிகள்,  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு விரைவில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நாடாளுமன்றத்துக்குள், சபை நிகழ்வுகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,  பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன்கள், புற ஊதா கிருமி நாசினிகள், இரு அவைகளுக்கும் இடையிலான சிறப்பு கேபிள் இணைப்புகள் மற்றும் பாலிகார்பனேட் தடுப்புகள் போன்றவை பயன்படுத்தப்பட உள்ளது.

1952 க்குப் பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுவது இதுவே  முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.