பாஜக கூட்டணியிலிருந்து  கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகல் : பினாய் தமாங்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா:

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக கோர்கா ஜன்முக்தி  மோர்ச்சா அறிவித்துள்ளது.


மேற்கு வங்க மாநிலம் வடக்கு வங்காளத்தில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள 4 மக்களவைத் தொகுதியில் இந்த கட்சியின் ஆதரவு இன்றி யாரும் வெற்றி பெறமுடியாது.

கடந்த 2009- ம் ஆண்டிலிருந்து மோர்ச்சாவின் ஆதரவுடன் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சிகளின் மெகா பேரணியில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் தலைவர் பினாய் தமாங் மற்றும் பொதுச் செயலாளர் அனித் தாபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது அணிக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று உறுதி அளித்து கடிதம் ஒன்றையும் மம்தா பானர்ஜியிடம் தமாங் அளித்தார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக, கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் பினாய் தமாங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுவரை மலைவாழ் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று  குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் தருவதாக மம்தா பானர்ஜி சம்மதித்துள்ளார். 11 சாதியினரை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும், நேபாளி மொழிக்கு மொழிவாரி சிறுபான்மை அந்தஸ்த்தை அளிக்க வேண்டும் என தமாங் கோரிக்கை வைத்துள்ளார்.

4 மக்களவைத் தொகுதிகளில் கோலோச்சும் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா, கூட்டணியிலிருந்து விலகியது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வை தோளில் சுமந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அக்கட்சி நிர்வாகிகளிடையே எதிரொலித்ததே, தமாங்கின் விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.