திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மேலும் 14 கட்சிகள் ஆதரவு

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மேலும் 14 சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன் , வல்லரசு பார்வர்ட் பிளாக் , ஆதிதமிழர் பேரவை , விவசாய தொழிலாளர் கட்சி , இந்திய தேசிய லீக் உள்பட  14 கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது கட்சிகளின் ஆதரவு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில், திமுகவும், அதிமுகவும்  விறுவிறுப்பு காட்டி வந்தன. முதன்முதலாக பாஜகவை தனது கூட்டணியில் சேர்த்து அதிரடி காட்டிய, அதிமுக  இன்றுவரை தனது கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

அதேவேளையில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்து அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்த நிலையில், தற்போது  பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட 14 கட்சிகளின் நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர். அவர்களிடம், ஸ்டாலின் தனியாக ஆலோசனை நடத்தினார்.