தமிழகத்தில் மேலும் 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு!

டில்லி,

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேலும் 30 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப் படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் திருவனந்தபுரம், ராய்ப்பூர், பாட்னா, டேராடூன், அலகாபாத் உள்ளிட்ட நகரங்களும் தேர்வு செய்யப்பட்டது. 30 நகரங்கள் பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டியின் 3 பட்டில்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாடு முழுவதுமிருந்து  ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே மூன்று கட்டமாக நாடு முழுவதுமிருந்து 50 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 4வது பட்டியலாக 30 நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருவனந்தபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாவட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி ஒரு பார்வை:

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் .

கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும்.

இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் கட்டிடம் உங்களுக்கு அந்த வேலையை செய்து முடிக்கும் . உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும் .

மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, இந்த திட்டத்தின் மூலம்  நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள்  அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.