சென்னை: பொதுவாக மழை காலங்களில்தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், தமிழகத்தின் கதையை எடுத்துப்பார்த்தால் கோடை காலத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பதிவான மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 57,927. அதில் பலியானோர் எண்ணிக்கை 14,644. அதேசமயம் மழைகாலமான அக்டோபர் மற்றும் நவம்பர் (2018) மாதங்களில் பதிவான மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346. பலியானோர் எண்ணிக்கை 1,077.

மேலும், பனிமூட்டம் நிலவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பதிவான மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 2,163. அவற்றில் பலியானோர் எண்ணிக்கை 390.

இதற்கு காரணம், விடுமுறை காலம் என்பதால் அதிகமானோர் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். சாலைகளில் வாகனப் பெருக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதுதவிர, கோடை காலத்தில்தான் பல இடங்களில் சாலை பராமரிப்பு பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன.

மேலும், நிலைமையை சீர்படுத்துவதற்கான போதிய அலுவலர்களும், வெயிலின் கொடுமை காரணமாக சாலைகளில் இருப்பதில்லை. பராமரிப்பு பணிகள் காரணமாக, பல வாகனங்கள் தவறான திசையில் சென்று விபத்துக்கு உள்ளாகின்றன.

இவையே கோடைகாலத்தில் அதிக விபத்துகள் நேர்வதற்கான காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன.