ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவு மதுபானப் பிரியர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர். ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்தான் அவர்.

அவர் கூறியதாவது, “நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே மதுவுக்குத் தடையுண்டு. நான் குஜராத் மாநிலத்தின் ஓராண்டு இருந்துள்ளேன். அம்மாநிலத்தில்தான் அதிகளவு மதுபானப் பிரியர்கள் உள்ளனர்.

இதுதான் மகாத்மா காந்தியினுடைய குஜராத் நிலை. ராஜஸ்தானில் மதுபானம் தடைசெய்யப்படும் என்ற தகவல் பொய்யானது. சட்டவிரோத மதுபானங்களை ஒழிக்கும்வரை மதுபானத் தடை விதிக்கப்படாது.

நான் தனிப்பட்ட முறையில் மதுபானத் தடை ஆதரவாளன். ஆனால் மதுவிலக்கு என்பது சட்டவிரோத மதுபானம் பெருகுவதற்கு வழிசெய்யும் என்பதால், அதற்கு தடைவிதிக்கும் முன்னர் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 1977ம் ஆண்டில் மதுவிற்கு தடைவிதிக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது” என்றார்.

குஜராத்தில் மதுவே கிடையாது. அது ஒரு சொர்க்கபுரி என்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே அவரின் ஆதரவு பத்திரிகைகள் பொய் புரட்டுகளை எழுதித் தள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், சட்டவிரோத மதுபானப் புழக்கம் அம்மாநிலத்தில் மிக அதிகம் என்ற செய்திகளும் தொடந்து வந்தவண்ணம் இருந்தன என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.