டில்லி:

பாராளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலை யில், அவரை வரவேற்று பேசிய தேனி பாராளுமன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்,  ஏழைகள் தொடர்பான திட்டங்களில் அதிக கவனம் தேவை என்று பேசினார்.

17வது மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லாவை பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன் மொழிந்த நிலையில், அவருக்கு எதிராக யாரும் போட்டியிட முன்வராத நிலையில் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓம் பிர்லா தேர்வை வரவேற்று அதிமுக சார்பில், தேனி பாராளுமன்ற உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத் குமார்  பேசினார். அப்போது,  நான் வருவதற்கு காரணமாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி என்று தொடங்கியவர், மத்திய அரசு ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என கூறினார், அதேவழியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்  என்று பேசிய ரவீந்திரநாத், புரட்சித்தலைவி அம்மா ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தவர், அதுபோல ஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  ரவீந்தரநாத்தின் பேச்சுக்கு பாராளுமன்றத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.