ண்டன்

ந்தியாவை விட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் உள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து தனது குடும்பம் மற்றும் வர்த்தக பங்குதாரரான மெகுல் சோக்சி உடன் அவர் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவரை நாட்டுக்கு கொண்டு வர சிபிஐ முயற்சி செய்து வருகிறது.

கடந்த வருடம் நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி இந்திய சரித்திரத்திலேயே மிக பெரிய அளவில் மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வடிவமைத்துள்ள நகைகளுக்கு ஹாலிவுட் நட்சத்திரங்களிடையே நல்ல மதிப்பு உள்ளது.

இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க நிரவ் மோடி மீது இண்டர்போல் ரெட் நோட்டிஸ்  அளித்துள்ளது.   இந்நிலையில் அவர் லண்டனில் இருப்பதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது. அந்நகரின் பாயிண்ட் டவர் பிளாக் என்னும் கட்டிடத்தில் ஒரு மாடியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார் எனவும் இந்த குடியிருப்பு மாத வாடகை 17000 பவுண்ட்  (ரூ.15.5 லட்சம்) ஆகும் எனவும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த செய்தியில், “நிரவ் மோடி தற்போது ஒரு பெரிய மீசை வைத்துள்ளார். அவர் தற்போது லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய அலுவலகம் அவர் இல்லத்தில் இருந்து மிக அருகில் அமைந்துள்ளது. அவரை தி டெலிகிராப் செய்தியாளர் தனது நாயுடன் அலுவலகத்துக்கு சென்ற போது பார்த்துள்ளார்.

அப்போது அவர் நெருப்புக் கோழியின் தோலினால் செய்யபட்ட சுமார் 10000 பவுண்ட் (ரூ 9.11லட்சம்)  மதிப்புள்ள கோட் அணிந்து இருந்தார். டெலிகிராப் செய்தியாளர் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்க மாட்டேன் என கூறி உள்ளார். நிரவ் மோடியின் அலுவலக பெண் பணியாளரிடம் செய்தியாளர் கேட்ட எந்த கேள்விக்கும் அவரும் பதில் அளிக்கவில்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சுதந்திரமாக லண்டனில் நடமாடுவது இந்திய பிரிட்டன் உறவுக்கு எதிரானதுஎன கூறப்படுகிறது. இண்டர்போல் அளித்துள்ள ரெட் நோட்டிசின் படி நிரவ் மோடி ஒரு தேடப்படும் குற்றவாளி ஆவார். அவரை உலக நாடுகளில் எங்காவது காண நேர்ந்தால் அவரை உடனடியாக கைது செய்யவும் ரெட் நோட்டிஸ் மூலம் இண்டர்போல் தெரிவித்துள்ளது. இண்டர்போல் நிரவ் மோடியின் புகைப்படம் அனைத்து நாட்டுக் காவல்துறைக்கும் அனுப்பப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.