சென்னை: கோடை காலத்தில் சென்னைக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடியில்  மியாவாக்கி வனம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 55 வகையான 10,000 எண்ணிக்கையிலான மரம் மற்றும் செடிகளை கொண்டு அடர்வனக் காடு அமைக்கும் பணிகள், மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,.

சென்னை நகர்புறங்களில் மக்கள் இயற்கையான காற்றை பெறக்கூடிய வகையில் 1000 மியாவாக்கி என்ற அடர்வன காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 51 காடுகள் தயார் நிலையில் இருக்கின்றனர். இதில் புழுதிவாக்கம் 36-வது காடாக திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த காடுகளில் முழுவதும் நாட்டு வகை மரங்கள், மூலிகை உள்பட அனைத்து தரப்பு மரங்கள் நடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சிறு உயிரினங்கள், ஈரப்பதமான காற்றினை பெறவும், வெப்பத்தை குறைக்கவும் பயன்படும். இப்பகுதி மக்கள் நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கு இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் கோடை காலத்தில் எழும்  தண்ணீர் பிரச்சினையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிநீர் வாரியத்துடன் இணைந்து கிணறுகள், குளங்கள் புதுப்பித்து தூர்வாரப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டம் முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. கடந்த கோடை காலங்களை விட இந்தாண்டு நீர் நிலைகளில்  கூடுதல் நீர் இருப்பு உள்ளது.

நீர் ஆதாரத்திற்கான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.