கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று திருவொற்றியூர் பகுதியில் அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.  அங்கு  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையான சிறப்பு  மருத்துவ முகாமை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்,
கொரோனா பேரிடர் நிவாரண சிறப்பு நிதியாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால்,  மத்தியஅரசிடம் இருந்து,  ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிவாரணமாக வழங்கப்படும் நிதியில் இருந்து 510 கோடி ரூபாய் மட்டுமே முதற்கட்டமாக வந்துள்ளது. இதுமட்டுமின்றி,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போன்று பல்வேறு நிவாரண பணிகளுக்கு தமிழகத் திற்கு சிறுக, சிறுக நிதி வழங்கப்பட்டு வருவது உண்மை தான். இருந்தாலும்,  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை, கூடுதலாக நிதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.