இந்திய விமானப் படையிலிருந்து அதிகளவில் விலகிவரும் விமானிகள்!

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு காலத்தில், இந்திய விமானப் படையிலிருந்து 798 விமானிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களில், தனியார் விமானங்களை ஓட்டுவதற்கு 289 பேர் தடையில்லாச் சான்று பெற்றுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த தகவல் கிடைத்துள்ளது.

இதில், கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகள்தான் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில், 2016ம் ஆண்டில் 100 விமானிகளும், 2017ம் ஆண்டில் 114 விமானிகளும் தங்களின் விமானப்படை பணியைத் துறந்துள்ளார்கள்.

அதேசமயம், 2015ம் ஆண்டு தங்கள் பணியைத் துறந்த விமானிகளின் எண்ணிக்கை 37 மட்டுமே. கடந்த 10 ஆண்டு காலத்திலேயே இந்தாண்டில்தான் குறைந்தளவு விமானிகள் பணியை துறந்துள்ளனர்.

ஒட்டுமொத்த சராசரியாகப் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு 80 விமானிகள் தங்கள் விமானப் படை பணியைத் துறக்கிறார்கள். இதன்மூலம், இந்திய விமானப்படையில் விமானிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு படைகளைப் பொறுத்தவரை, இது மகிழ்ச்சியான செய்தி அல்ல என்று கூறப்படுகிறது.