கீழடியில் அகழாய்வு பணிகள் தீவிரம்: பழமை வாய்ந்த கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே கீழடியில் பிப்ரவரி 19ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகின்றன.

கீழடியில் ஏற்கனவே 5ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சி 6ம் கட்டத்திலும் கண்டறியப்பட்டது. மற்றொரு குழியில் இரும்பு உலை இருந்தது. இன்று அந்த குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லால் ஆன 4 எடைக்கற்கள் கண்டறியப்பட்டன.

எடைக்கற்கள் உருண்டை வடிவில் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதி தட்டையாக காணப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் முறையே 8 கிராம், 18 கிராம், 150 கிராம், 300 கிராம் எடை கொண்டவை.

கீழடியில் உலை அமைப்பு, இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளில் இருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை கண்டறியப்பட்டதால் இப்பகுதி தொழிற்கூடமாக இருந்துள்ளது என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த முறையில் வணிகமும் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.