வருமானத்திற்கு அதிகமான சொத்து: எம்.பி., எம்எல்ஏக்களை பதவி நீக்க வேண்டும்! உச்சநீதி மன்றம்

டில்லி:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வருமானத்தின் ஆதாரத்துடன், வேட்பாளரின் மனைவி பிள்ளைகளின் வருமானத்தையும் குறிப்பிட வேண்டும் என்றும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்க்கும் எம்.பி.,எம்எல்ஏக்களை உடடினயாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று  உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் குறித்து, லோக் பிரஹாரி எனும் அரசு சாரா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கலின்போது தங்களின் சொத்துகள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்கள் விவரம் காட்டும்போது, அதற்கான ஆதாரம் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை என்று கோரி யிருந்தது.  எனவே இனி வரும் காலங்களில் இந்தத் தகவல்களையும் வேட்பாளர்கள் வழங்க உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவுடன்,  தன்னுடைய சொத்து, மனைவி மற்றும் பிள்ளைகளின் சொத்து விவரங்கள் காட்டப்படும் போது, அத்துடன் அந்த சொத்துக்கள் வந்த விதம், அதற்கான வருமானம் எப்படி வந்தது என்பது குறித்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் பதவியில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றம்,  எம்.பி., எம்எல்ஏக்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருந்தது தெரியவந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதி மன்றத்தில் இன்றைய தீர்ப்பு அரசியல்வாதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.