அதிக அளவிலான டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும்: ஆய்வறிக்கையில் தகவல்

--

கனடா:

ஸ்மார்ட் போன் உட்பட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவு, படிப்பில் ஈடுபாடு குறைவு ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கனடாவில் அல்பர்டாவில் உள்ள கல்காரி பல்கலைக்கழக உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஷெர்ரி மாடிகன் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கமுள்ள 2,500 பெண்கள் மற்றும் 2 முதல் 5 வயது வரையிலான பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

தினமும் தொடர்ந்து 3 மணிநேரம் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுடன் செலவிடும் குழந்தைகளின் அறிவு மங்கியிருப்பதும், அவர்களுக்கு படிப்பு வராததும் கண்டறியப்பட்டது.

அதேசமயம், குறைந்த அளவு டிஜிட்டல் சாதனங்களை கையாளும் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி, படிக்கும் ஆற்றல் அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து திரையை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நடைபயிற்சி வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். பேசுவதையும், அடுத்தவர்களிடம் உரையாடுவதையும்கூட குறைத்துவிடுகிறார்கள்.

டிஜிட்டல் சாதனங்களின் நல்ல பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுடன் சேர்ந்தே தொலைக்காட்சியையோ, கணிணியையோ அல்லது ஸ்மார்ட் போன்களையோ பெற்றோர் பயன்படுத்த வேண்டும்.

அப்போது, பெற்றோர்களிடம் சந்தேகம் எழுப்பி விடை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். மொழித் திறனும், கற்பித்தலும் தன்னாலேயே நடக்கும்.

தொழில்நுட்பத்தை நல்ல பயன்பாட்டுக்கு பயன்படுத்த குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்துரைத்தால், குழந்தைகளின் வளர்ச்சியும் வெற்றிகரமாக அமையும்.
இவ்வாறு அவர் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.