Random image

கர்நாடகா : பெங்களூரு அரசு அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

பெங்களூரு

பெங்களூருவில் இருந்த அரசு அதிகாரிகள் பலர் வடக்கு கர்நாடக பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக வெகு நாட்களாக போராடி வருகின்றனர்.   கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சி பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக பகுதிக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக கூறிய அப்பகுதி தலைவர்கள்  தங்கள் பகுதியை பிரித்து தனி மாநிலமாக்க கோரி உள்ளனர்.

நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது.  இதில் கலந்துக் கொண்ட அமைச்சர்கள் வடக்கு கர்நாடகப் பகுதி நிலவரம் குறித்து விவாதித்தனர்.  வடக்கு கர்நாடக  பகுதி நலத் திட்டங்களான கிருஷ்ண பாக்யா ஜல நிகம், வடக்கு கர்நாடக நகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், உள்ளிட்ட பல அலுவலகங்கள் பெங்களூருவில் இயங்குவதை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.

அதை ஒட்டி வடக்கு கர்நாடகப் பகுதிகள் சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களையும் அப்பகுதியில் இருந்து இயக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டது.   அத்துடன் வடக்கு கர்நாடக விவகாரங்களை கவனிக்க ஒர் குழு அமைக்கப்பட்டு முதல்வர் குமாரசாமி அந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த பணிகளுக்கு ஆரம்பமாக பெங்களூருவில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடனடியாக வடக்கு கர்நாடக பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.