1000க்கு மேற்பட்ட வழக்குகள் 50 வருடங்களாக நிலுவையில் உள்ளன : ரஞ்சன் கோகாய்

--

டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில் இருந்து வருகின்றன.   ஆங்கிலத்தில் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என ஒரு  பழமொழி உண்டு.  இதை பலமுறை பல நீதிபதிகள் கூறியது உண்டு.  ஆயினும் நடைமுறையில் அந்த பழமொழியை பெரும்பாலான நீதிபதிகள் பின்பற்றுவது இல்லை என நீதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஒரு நிகழ்வு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துக் கொண்டு பேசினார்.  அப்போது அவர், “கடந்த மதம் 10 ஆம் தேதி அன்று நான் கவுகாத்தி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி அனுப் குமாரைச் சந்தித்தேன் .  அப்போது அவர் தனது நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.  நான் அவற்றை உடனடியாக  தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்தியாவில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அது போக 25 வருடங்களாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.   நான் இது குறித்து அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் பேசி உள்ளேன்.  முதலில் 50 வருடம் வரை நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக முடித்து விட்டு அதன் பிறகு 25 வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.” என தெரிவித்தார்.