அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும்பனிப்பொழிவினால் சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Polar

தற்போது அமரிக்காவில் குளிர்காலம் நிலவி வருகிறது. இதனால் அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. நாட்டின் மேற்கு பகுதியில் குளிரின் தன்மை மிகவும் அதிகமாக இருபதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக நிலவும் பனிப்பொழிவதால் சிகாகோவில் மைனஸ் 30 டிகிரியிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரிக்கும் குளிர் நிலவி வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பல இடங்களில் பனிப்பொழிவுடன் சேர்த்து குளிர் காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக சிகாகோவில் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் வானிலை மந்தமாக இருப்பதால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விஸ்கான்சி, மிச்சிகன், இல்லினாய்ஸ், மிசிசிப்பி, அலபாமா உள்ளிட்ட மாநிலங்களில் குளிரின் தன்மை அதிகமாக இருப்பதால் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.