இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி: மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

புதுடெல்லி:

இந்தியாவின் 40% பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வறட்சி எச்சரிக்கை முறை என்ற அமைப்பின் தகவலின்படி, மார்ச் 26-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் 42% பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 6% பகுதி முற்றிலும் வறண்டு போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்கண்ட்,கர்நாடகா, மகாராஷ்ட்ரா, வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பகுதி, ராஜஸ்தான்,தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மோசமான வறட்சியை சந்தித்து வருவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஆந்திரா, குஜராத்,கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், பெரும்பாலான மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக அறிவித்துள்ளன.
இருந்தாலும், மத்திய அரசு அறிவிக்கவில்லை.

மழைக்காலத்துக்கு முன்பு, அதாவது இன்னும் 3 மாதங்கள் பெரும்பாலான இடங்களில் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று எச்சரிக்கிறார் குஜராத் காந்தி நகர் ஐஐடி பேராசிரியர் விமல் மிஸ்ரா.

இந்த ஆண்டு மழை பெய்யாததே தற்போதைய வறட்சிக்கு காரணம். அக்டோபர், நவம்பரில் 10%-20% மட்டுமே மழை கிடைத்தது. வடகிழக்கு பருவ மழை. கடந்த ஆண்டு 44% மழை பற்றாக்குறை ஏற்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டை தவிர, 2015-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் வறட்சி ஏற்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்பமயமாதலால், இந்தியாவில் கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தை ஏற்படுத்தி, மழை அளவை குறைத்துள்ளது.

மழை பற்றாக்குறையால் நாட்டில் பல அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

வறட்சி காரணாமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அதிக அளவில் இடம்பெயர்வு நடக்கிறது.

தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய அரசின் கவனமும் வறட்சியை நோக்கி திரும்பவில்லை என்றார்.