திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோவில், ஜூன் மாதம் 8ந்தேதி முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள், மற்றும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு,  குறைந்த அளவிலான உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமலையில் பணிபுரியும் தேவஸ்தான  ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டவர் களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.  கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், நாதஸ்வர வித்வான்கள், விஜிலென்ஸ் பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார்  உள்பட பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளுமாறும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான உணவுகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,  ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மகா துவாரத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அந்த வழியாக மட்டுமே  பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.