டில்லி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவறைகளில் 60% மேல் நீர் இல்லாததால் உபயோகிக்க படாமல் உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறைகள் கட்டபட்டு திறந்த வெளி கழிவறை இல்லா நாடாக இந்தியா மாற்றப்படும் என மோடி அறிவித்தார். அதை ஒட்டி ஏழை மக்கள் வீடுகளுக்கு கழிவறை அமைக்க ரூ. 9,000 மற்றவர்களுக்கு ரூ. 3000 எனவும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் 3.5 கோடி புதிய கழிவறைகள் கட்டப்பட்டன. இது 2001 ஆம் வருடம் இருந்ததைப் போல் இரு மடங்காகும். இந்த விவரங்கள் அரசின் சாதனைகளாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பு கழிவறை இல்லா வீடுகளே இல்லாத நிலை உண்டாகும் என பாஜகவினர் கூறி வந்தனர்.

அரசு சார்பில் சமீபத்தில் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வின் முடிவில், “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிவறைக்ளில் 60%க்கு மேல் உள்ள கழிவறைகளில் நீர் இல்லாமல் உள்ளது. அத்துடன் கழிவு நீர் வெளியேறும் வசதிகளும் அமைக்கவில்லை. இதனால் இந்த கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

அசாம், பஞ்சாப், ஓரிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறைகள் சுத்தீகரிப்பாளர் நியமிக்கப்படாத நிலையில் உள்ளன. தற்போது பெரும்பாலான வீடுகளில் கழிவறை உள்ள போதிலும் நீர் இல்லாததாலும், க்ழிவு நீர் வடிகாலுடன் இணைக்கப்படாததாலும் பலர் மீண்டும் திறந்த வெளி கழிவறையை உபயோகிக்க தொடங்கி உள்ளனர்.

பல இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. அது மட்டுமின்றி ஒரு சிலர் நீர் இல்லாமையால் கட்டிய நாள் முதலில் இருந்தே கழிவறைகளை சமையலறையாகவும் ஸ்டோர் ரூம் ஆகவும் உபயோகிக்கின்றனர்” என தெரியவந்துள்ளது.