லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு பயன்படுத்த முதன் முதலாக இங்கிலாந்து அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி பைசர், பயோ என் டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கியுள்ளன. இந் நிலையில் இங்கிலாந்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டிசம்பர் 8ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை 6 லட்சத்து 16 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட மையங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் அண்மையில் புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்நாட்டுடனான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.