சென்னை:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு  நாட்டின் பல மாநிலங்களுக்கு முதல் கட்டமாக ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதன்படி நிதி வழங்கப்பட்டது. இதில், தமிழகத்துக்கு  முதல் தவணையாக மத்திய அரசு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதேபோன்று ஆந்திர பிரதேசத்திற்கு 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான முதல் தவணையாக ரூ.431 கோடியும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான 2வது தவணையாக ரூ.870.2363 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால்,  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய சுகாதார நடவடிக்கை நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக 3,000 கோடி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற தேவைகளுக்காக மத்திய அரசின் உதவியாக 4,000 கோடி, சிறப்பு மானியமாக 9,000 கோடி வழங்கும்படி பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.