கடன் பெறுவதில் புதிய கார்களை முந்தும் பழைய கார்கள்

மும்பை:

20151-16ம் ஆண்டில் 3.3 மில்லியன் பழைய கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. அதே சமயம் 2.8 மில்லியன் மடடுமே புதிய கார்கள் விற்பனையாகியுள்ளது. புதிய கார்களுக்கு சிலவற்றுக்கு மட்டுமே கடன் பெறப்பட்டுள்ளது என்று கார்டெகோ என்ற நிதிநிறுவன தலைவர் நமித் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ஆனால் ஒரு மாதத்திற்கு 3 லட்சம் பழைய கார் விற்பனையில் 40 ஆயிரம் கார்களுக்கு கடன் பெறப்படுகிறது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 55 சதவீத பழைய கார்கள் கடன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இலக்கை நோக்கி இந்திய சந்தை பயனிக்கிறது. பழைய கார்களுக்கு கடன் வாங்கும் நடைமுறை எளிமையாகவும், வெளிப்படையாகவும், வேகமாகவும் இருக்கிறது. ஆனால் புதிய கார்களுக்கு கடன் பெறுவது கடினமாக உள்ளது’’ என தெரிவித்தார்.

‘‘நுகர்பொருள் கடனுக்கு வழங்கப்படும் தொகையை விட 10 மடங்கு தொகை கார்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல புதிய நிறுவனங்கள் இந்த சந்தைக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பழைய கார் விற்பனை டீலர்களுக்கு தனி நெட்வொர்க் அமைக்கப்பட்டது. இதில் தற்போது 100 டீலர்கள் உள்ளனர். இந்த நெட்வொர்க் மூலம் 10 நாட்களில் வழங்க வேண்டிய கடன் 4 நாட்களில் வழங்கப்படுகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்டது முதல் ரூ. 100 கோடி மதிப்பிலான 5 ஆயிரம் கார்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது’’ என நமித் ஜெயின் தெரிவித்தார்.

மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் நாகேந்திர பாலே கூறுகையில்,‘‘பழைய வாகன கடன் வர்த்தகம் அதிகளவில் நடக்கிறது. தேவையான தகவல்கள் குறிப்பாக வாகன மதிப்பீடு, ஆவணம் ஆகியவை உடனடியாக கிடைக்கிறது. வாகனத்தை உடனடியா ஆய்வு செய்வது, விலை, வாங்குவோரும் எளிதில் அடையாளம் காணமுடிகிறது. இது போன்ற காரணங்களால் பழைய வாகன கடன் சந்தையில் நல்ல வர்த்தகம் உள்ளது’’ என்றார்.

மகிந்திரா நிதிநிறுவன துணைத் தலைவர் ரமேஷ் அய்யர் கூறுகையில் ‘‘கடந்த காலங்களில் பழைய வாகனங்களுக்கு கடன் கொடுப்பதில் சிரமங்கள் இருந்து வந்தது. ஆனால் தற்போது முதல் பயன்பாட்டாளரிடம் இருந்து வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. மாத சம்பளம் வாங்குவோர், டூவீலரில் இருந்து காருக்கு மாறுவோர் போன்றவர்களுக்கு கடன் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதனால் பழைய கார்களுக்கான கடன் தேவை அதிகரித்துள்ளது’’ என்றார்.

புதிய கார்களை விட பழைய கார் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து கூடுதலாக தான் உள்ளது. குறிப்பாக புதிய காருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 9.20 சதவீதம் முதல் 9.25 சதவீதமும், பழைய கார்களுக்கு 12.65 சதவீத வட்டி வதிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியில் 14.5 சதவீதம் முதல் 16.25 சதவீத வட்டியில் பழைய கார் கடன் வழங்கப்படுகிறது. அதே சமயம் புதிய கார்களுக்கு 11 முதல் 12 சதவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.