சென்னை :
ந்தியாவில் எங்கும் இல்லாததை விட கேரளா, தமிழ்நாட்டில் அதிகமான பெண்கள் சொந்தமாக தனியாக வசிக்கின்றனர்.
நாட்டில் எங்கும் இல்லாத அளவு இரு மடங்கு அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தான் பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட 2018 ம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரி புள்ளிவிவரத்தின் படி, கேரளாவில் 9.3% பெண்களும் மற்றும் தமிழ்நாட்டில் 9.2% பெண்களும் யாரையும் சாராமல் தனியாக வாழும் – விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் அல்லது திருமணத்திற்குப் பிறகு தனியாக வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இது நாடு முழுவதும் தனியாக வாழும் பெண்களின் தேசிய சராசரியான 5.5 சதவீதத்தை விட இரு மடங்காகும். எந்தவொரு பாலினத்தையும் சார்ந்து இல்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருங்கிணைந்த தேசிய சராசரி 3.5% ஆக இருந்தாலும், இந்தியாவில் குறைந்தது 1.5% ஆண்கள் அல்லது கிட்டத்தட்ட 1 கோடி பேர் தனியாக வாழ்கிறார்கள் என்று கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50.3% பேர் ‘ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான குடிமக்கள் மொத்த மக்கள் தொகையில் 46.3% ஆகவும், விதவை / விவாகரத்து / பிரிந்துவாழ்பவர்கள் 3.5% ஆகவும் உள்ளனர். தேசிய அளவில் – விதவை / விவாகரத்து / பிரிந்துவாழ்பவர்கள் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களின் விகிதமே அனைத்து பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகமாக உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான தனிக்குடித்தனங்கள் இருக்கின்றது.

வாழ்க்கைத் துணையின் வயது வித்தியாசம் கூட பெண்கள் தனியாக வாழ்வதற்கு காரணமாக இருக்கலாம்.

ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாநிலங்களில் மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான அதிக வயது வித்தியாசமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
65 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் எம்.சுந்தரி சமீபத்தில் தனது கணவரை இழந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தாலும், சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து சமூகச் சேவை செய்கிறார். “எனது ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார், ஆண்டுக்கு ஒருமுறை அவரை பார்க்கச் செல்வேன். என் மற்றொரு மகன் அருகிலேயே வசிக்கிறான், ஆனால் என் மருமகளுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, இரு குடும்பங்களும் மன அமைதியோடு வாழும் வகையில் நான் தனியாக வசிக்க முடிவு செய்தேன், ”என்று  கூறினார்.
பெண்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள் அல்லது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வீடுகளுக்கு தலைமை தாங்குகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான 22.32 லட்சம் குடும்பத்தில் பெண்களே குடும்ப தலைவிகளாக இருப்பது தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“முதலில் அது கேரளாவில் இருந்தது, இப்போது அது தமிழ்நாடு. பல பெண்கள் 30 வயதிற்கு முன்பு திருமணம் செய்ய மறுக்கிறார்கள். கல்வி முடித்த பின்னர், திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு சில வருடங்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள், ” என்று மும்பையைச் சேர்ந்த சர்வதேச மக்கள் தொகை ஆய்வு நிறுவன பேராசிரியர் பி. ஆரோக்கியாசாமி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
ஒரு பெண் திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளும் நேரத்தில், அவருக்கு வயது 30 அல்லது 32 ஐ கடந்துவிடுகிறது. “மணமகனுக்கு அவரை விட குறைந்தது இரண்டு அல்லது ஐந்து வயது கூடுதலாக இருக்கிறது. வயதாகும்போது, ​​பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களில் ஆண் உறுப்பினர் பெண்ணுக்கு முன்பாக இறந்து விடுகிறார். பெண்கள், தங்கள் சொந்த வருமானத்தில் அல்லது கணவன் விட்டுச் சென்ற சேமிப்பில், தனியாக வாழ்கிறார்கள், பெரும்பாலும் தங்கள் மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ அருகிலேயே வசிக்கிறார்கள்” என்று ஆரோக்கியாசாமி கூறினார்.
இந்த இரண்டு மாநிலங்களில் பெண்கள் தனியாக வாழ மற்றொரு காரணம் தனிக் குடித்தனம். “தமிழ்நாட்டில், குறிப்பாக, பிள்ளைகளுக்குத் திருமணமானதும், பெற்றோர் தனியாக வாழ முடிவு செய்கிறார்கள். எனவே, தந்தை இறந்த பிறகும், தாய் தொடர்ந்து தனியாக வாழ முடிவு செய்கிறார்” என்றார்.