மொரோக்கோவில் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட புல்லட் ரயில் சேவை!

--

மொரோக்கோ:

மீபத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனுடன் இணைந்து மொராக்கோவின் மன்னர் முகம்மது புதிய புல்லட் ரயில் சேவையை துவக்கிவைத்தார்.

இந்த இரயில் போக்குவரத்து சேவை, கடந்த பத்து ஆண்டு கால வளர்ச்சியின் பயனாக, பிரஞ்சு நிதியுதவி மற்றும் சில வளைகுடா பிராந்திய நிதிய ஆதரவால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எல்ஜிவி (LGV) எனப்படும் அதி வேக இந்த புஙல்லட் ரயில், டாங்கிர் மற்றும் காஸபிளன்காவின் பொருளாதார மையங்களுக்கிடையேயான வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மணிக்கு சுமார் 320 கி.மீ. (199 மைல்) வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரயில், 2 மணி நேரம் 10 நிமிடங்களிலேயே செல்ல வேண்டிய இலக்கை அடைந்துவிடும் என்றும், இதே தூரத்தை சாதாரண ரயிலில் பயணிக்க 5 மணி நேரமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புல்லட் ரயில் சேவை குறித்து தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், முதல் மூன்று ஆண்டுகளில் 6 மில்லியன் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பில்லியன் டாலர் மதிப்புடைய மொராக்கோவின் அதிவேக இரயில் திட்டமானது கடந்த செப்டம்பர் 2011ம் ஆண்டு பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் இணைந்து மொரோக்கோ மன்னரால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் அபிவிருத்திக்காக, பிரான்ஸ் 51 சதவிகிதமும், மொராக்கோ 28 சதவிகிதமும் நிதியுதவி அளித்தது. மேற்கொண்டு 21 சதவிகித நிதியுதவி குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றால் வழங்கப்பட்டது.

சுவாரஸ்யமாக, மொராக்கோ மன்னர் முதல் ரயில் பாதைக்கு அல் பொராக் என்று பெயரிட்டார். அல் பொராக் என்பது புராண கதைகளில், வானதூதர்களை சொர்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு வித உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.