ரஷ்யா: உலக கால்பந்து ரசிகர்களின் தாகத்தை தீர்க்க பீர் வகைகள் குவிப்பு

மாஸ்கோ:

கால்பந்து ரசிர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ரஷ்ய கடைகளில் பீர் வகைககள் குவிக்கப்பட்டுள்ளது.

 

உலக கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. ஜூலை 11ம் தேதி வரை ரஷ்யாவில் உள்ள 11 நகரங்களில் இப்போட்டி நடக்கிறது. சுமார் ஒரு மாத காலம் நடக்கும் இந்த போட்டிகளை காண உலகளவில் இருந்து கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்துள்ளனர்.

ரசிகர்களின் தாகத்தை தீர்க்க பஞ்சமில்லாத வகையில் அங்குள்ள கடைகளில் பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பிராண்டுகள் மட்டுமின்றி உள்ளூர் தயாரிப்பு பீர்களும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டான அழுபுகா வுகுசாவின் கடைகளில் ஹெயினெகன், கின்னஸ் போன்ற பீர்களும், உள்ளூர் தயாரிப்புகளான சோலோதயா, போச்கா போன்றவையும் கடைகளின் அலமாரிகளில் நிரம்பியுள்ளது.

பார், ரெஸ்டாரன்ட், தெரு ஓர கடைகளிலும் பார்ட்டி கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலககோப்பை போட்டி காரணமாக ரஷ்யாவில் வழக்கமாக கோடை காலத்தில் விற்பனையாகும் பீர்களை விட அதிக எண்ணிக்கையில் தற்போது விற்பனையாகியுள்ளது என்று சர்வதேச பீர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பீர்கள் தட்டுப்பாடின்றி ரசிகர்களுக்கு கிடைக்க அனைத்து விற்பனையகங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று ஆன்ஹியூசர் புஸ்ச் மதுபான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி முதல் பீர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரஷ்யாவின் உணவு சில்லரை வர்த்தக நிறுவனமான ஓ கி தெரிவித்துள்ளது.

போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் அங்கு பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை உணர்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது அங்கு பீர் விநியோகத்தை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.