டெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாமல் கைவிடுகிறார்கள் என்பது ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 238 மாவட்டங்களில் 8000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. 30 சதவீததத்தினர் மட்டுமே கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனர் என்றும், 12 சதவீதத்தினர் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமூடி அணிந்துகொள்ளவும், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதற்கும் ஒப்புக்கொள்கிறார்களா என்ற அடிப்படையில் அவர்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவர்களில் 16 சதவீதம் பேர் சமூக இடைவெளி மற்றும் முகமூடி அணிவது ஆகிய இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், 22 சதவீதம் சமூக இடைவெளியை மட்டும் கடைபிடிப்பதாகவும் கூறி உள்ளனர்.

 

12 சதவீதம் பேர்  மட்டுமே சமூக இடைவெளி, முகமூடி அணிவது இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபரில் நாள் ஒன்றுக்கு பதிவான 75 ஆயிரம் கொரோனா தொற்று என்ற எண்ணிக்கை இப்போது ஒரு நாளைக்கு 15 ஆயிரம் என்ற அடிப்படையில் குறைந்திருக்கிறது.

ஆனால் இப்போது பிப்ரவரி 14ம் தேதிக்கு பின்னால் நாட்டில் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அடுத்த 8 நாட்களுக்குள் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான லாக்டவுன் விதிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.