இடையிலேயே நாடு திரும்பும் வெளிநாட்டு வீரர்கள் – போட்டிகளின் போக்கு மாறுமா?

சென்னை: உலகக்கோப்பை போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பல வெளிநாட்டு வீரர்கள், முன்னதாகவே நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் ஆட்டங்களின் போக்கு எப்படியிருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் இறுதியாட்டம் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது.

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளின் அணியினர் மட்டுமே, முழு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் ஆஃப்ரிக்க அணியின் உலகக்கோப்பை போட்டிகளுக்கான முந்தைய ஆட்டங்கள், மே 12ம் தேதி துவங்கவுள்ளதால், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் உள்ள வீரர்கள் தவிர, பிறர் முன்னதாகவே நாடு திரும்புவர் என்று கூறப்படுகிறது.

ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆடும் இங்கிலாந்து வீரர்கள், ஏப்ரல் 26ம் தேதியே நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டு வீரர்களோ, மே 2ம் தேதி நாட்டிலிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை வீரர்களுக்கு, மே 6ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பலர் முன்னதாகவே நாடு திரும்புவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்தமுறை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுவதால், கவனம் கூடியுள்ளது.

– மதுரை மாயாண்டி