ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் – புதிய சாதனைப் படைத்த ரோகித் ஷர்மா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய மாற்று நாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் ஷர்மா.

சிட்னி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த ரோகித் ஷர்மா, நாதன் லயன் பந்துவீச்சில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். அது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த நூறாவது சிக்ஸராக ஆகிப்போனது.

இந்தவகையில், அன‍ைத்துவகை கிரிக்கெட்டிலும் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்(100) அடித்த எதிரணி வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் ஷர்மா.

ஒருநாள் போட்டியில் மட்டும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார் ரோகித் ஷர்மா. ரோகித் ஷர்மா மொத்தமாக அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கை 424 என்பதாக உயர்ந்துள்ளது.

முதலிடத்தில் 534 சிக்ஸர்களுடன் உள்ளார் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல். 476 சிக்ஸர்களுடன் இரண்டாமிடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி.