நாட்டில் மிகவும் பாதுகாப்பற்ற உணவு விற்கப்படும் இடம் தமிழகம் : அதிர்ச்சி தகவல்

சென்னை

நாட்டில் பாதுகாப்பு அற்ற உணவு அதிகம்  விற்கப்படும் இடம் தமிழகம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏராளமான உணவு விடுதிகள் அமைந்துள்ளன.   இதில் நட்சத்திர விடுதிகளில் இருந்து சாலையோர உணவகங்கள் வரை பல தரப்பு உணவு விடுதிகளும் அடங்கும்.  இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் தமிழக உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர்.   இதற்கு தமிழக உணவின் சிறப்புச் சுவையே காரணம் எனக் கூறலாம்.   சுவை அதிகமாக இருக்கும் தமிழக உணவு பாதுகாப்பானதா என்பது குறித்து ஒரு ஆய்வு நடந்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையம் நடத்திய இந்த ஆய்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.  இந்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையில் தமிழகத்தில் விற்கப்படும் உணவு சாப்பிட லாயக்கற்றவை எனவும் மிகவும் பாதுகாப்பற்றது எனவும் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.

இந்த ஆய்வில் சோதிக்கப்பட்ட மாதிரிகளில் 45% க்கும் மேற்பட்டவை உணவுத் தரக்கட்டுப்பாட்டில் காணப்படும் அளவில் 12.7% மட்டுமே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் உள்ளதால் அவை சாப்பிடப் பாதுகாப்பு அற்றவை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இத்தகைய உணவு உட்கொள்வதன் மூலம் 31 வகையான நோய் தாக்குதல் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த உணவு மாதிரிகளில் கால்நடை மற்றும் விவசாயத் துறைகளில்  பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகள் மற்றும்  சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த மாதிரிகளில் எந்த ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்னும் விவரம் அறிக்கையில் காணப்படவில்லை.  அத்துடன் உணவுப் பொருட்கள் மாதிரிகளைச் சோதிக்க தேவையான சோதனைச்சாலை வசதிகள் மாநிலத்தில் இல்லை என அறிக்கை தெரிவிக்கிறது.   எந்தெந்த நிறுவன உணவு வகைகள் சோதிக்கப்பட்டன என்பது குறித்தும் சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.