கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவி ஒருவர், கடந்த நவம்பர் 26ம் தேதி தனது நண்பர்களுடன் பூங்கா ஒன்றில் இரவில் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல், அம்மாணவியை மிரட்டி ஆபாச புகைப்படம் எடுத்ததோடு, பாலியல் வன்கொடுமையும் செய்தனர். மேலும் அழைக்கும்போது எல்லாம் வராவிட்டால்,  புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவோம் என அக்கும்பல் மிரட்டியுள்ளது.

இது தொடர்பாக பெற்றோரிடம் அம்மாணவி கூற, காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாகவும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். இதனால் வேறு வழியின்றி மகளிர் நீதிமன்றத்தில் நேற்று மணிகண்டன் சரணடைந்தார்.

இந்நிலையில் தற்போது தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியா கார்த்திக் என்பவர் இரவு 10 மணியளவில் கோவையில் கைது செய்யப்பட்டதாகவும், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.