சென்னை : ஒரு தலைக்காதலால் தாயையும் மகளையும் கொன்ற வாலிபன்

சென்னை

சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் ஒரு வாலிபன் மகளை தீயிட்டு கொன்ற போது காப்பாற்ற சென்ற தாய் தற்போது மரணம் அடைந்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் ஏ ஜி எஸ் காலனியில் வசிக்கும் இளம்பெண் இந்துஜா.  இவரை இவருடைய பள்ளித் தோழன் ஆகாஷ் வெகுநாட்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.   22 வயதான  இந்துஜா தனது தாய் ரேணுகா (42) மற்றும் தங்கை நிவேதா (20)  மற்றும் தம்பி மனோஜுடன் வசித்து வருகிறார்.  இந்துஜாவின் தந்தை கனடா நாட்டில் பணியில் உள்ளார்.

இந்துஜா பள்ளியில் படிக்கும் போதிருந்தே ஆகாஷ் (வயது 22) அவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.   ஆனால் அப்போதிருந்தே இந்துஜா இவர் காதலை ஏற்கவில்லை.  பி டெக் முடித்த இந்துஜா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தார்.   ஆகாஷ் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதால் பணிக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்.

சம்பவத்தன்று இந்துஜாவின் வீட்டுக்கு வந்து அவரிடம் ஆகாஷ் தகராறு செய்துள்ளார்.   இந்துஜாவின் தாயார் கோபமாக பேசி ஆகாசை விரட்டி விடவே வீட்டு வாசலில் வைத்திருந்த பெட்ரோலை இந்துஜா மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஆகாஷ் ஓடி விட்டார்.  பதறிப்போன ரேணுகாவும் நிவேதாவும் இவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.  இதனால் அவர்களும் தீக்காயம் அடைந்தனர்.

போலீசார் விரைந்து வந்து அனைவரையும் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சேர்த்தனர்.  இந்துஜா சேர்க்கப்பட்ட உடனேயே மரணம் அடைந்தார்.   நிவேதாவும் ரேணுகாவும் பிறகு தனியார் மருத்தவமனைக்கு மாற்றப்பட்டனர்.  நிவேதா குணமடைந்த நிலையில்,  ரேணுகா நேற்றிரவு மரணம் அடைந்தார்.

தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.