பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுடன் தாய், மனைவி சந்திப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூ‌ஷண் ஜாதவ் (வயது 47). குல்பூ‌ஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட்டு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூ‌ஷண் ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து இருவரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாதுகாப்புக்கு இடையே குல்பூஷண் ஜாதவை அவர்கள் சந்தித்தனர். அவர்களுக்கு குல்பூஷண் ஜாதவிடம் பேச 30 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்பட்டது.

குல்பூ‌ஷண் ஜாதவை நேரடியாக பேச முடியாத விதமாக நடுவே கண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஜாதவை பார்த்ததும் அவருடைய தாயார் அவந்தி, மனைவி சேத்தன்குல் இருவரும் கண் கலங்கினர். ஜாதவும் வேதனையுடன் அவர்களை பார்த்தார். தாயார் மற்றும் மனைவியை பார்க்க அனுமதி வழங்கிய பாகிஸ்தான் அரசுக்கு குல்பூஷண் ஜாதவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குல்பூஷண் ஜாதவை அவருடைய தாயார் மற்றும் மனைவி நேரடியாக சந்திக்க முடியாத வகையில் கண்ணாடி தடுப்பு வைக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறுகையில், ‘‘இது பாதுகாப்பு காரணமாகும். நாங்கள் குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் போது தடுப்பு இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்’’ என்று தெரிவித்துள்ளது.