வேறு ஜாதி பெண்ணை மணந்த மகனை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த தாயார் கைது..

வேறு ஜாதி பெண்ணை மணந்த மகனை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த தாயார் கைது..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் மகன் அருண்குமார், வேறு சாதிப்பெண்ணைக் கல்யாணம் செய்துள்ளார்.

பெற்றோருக்குப் பயந்து அவர், தனது மனைவியுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வசித்து வந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த வரதராஜ், பள்ளிப்பாளையம் சென்று மகன் அருணை, தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகன் அருண் மீது அவரது தாயார் அபிலா கடும் கோபத்தில் இருந்தார்.

அபிலா ,தனது இரு தம்பிகள் உள்ளிட்ட உறவினர்கள் உதவியுடன் , அருணை அங்குள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.

அப்படியும் ஆத்திரம் தணியாததால், அருணை மொட்டை அடித்துள்ளனர்.

இது குறித்து அருண் மனைவி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணுக்கு மொட்டை அடித்த அவரது தாயார் அபிலா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.சினிமாவில் இடம் பெறும் ’கிளைமாக்ஸ்’  காட்சி போல் இந்த சம்பவத்திலும், யாரும் எதிர்பாராத ’கிளைமாக்ஸ்’’ காட்சி அரங்கேறியது.

மொட்டை அடித்து, துன்புறுத்தப்பட்ட அருணும் கைது செய்யப்பட்டார்.

ஏன்?

அருண் கல்யாணம் செய்த பெண்ணுக்கு 17 வயது தான் ஆகிறது.

’மைனர்’  பெண்ணை  திருமணம் செய்ததாக அருண் மீது ‘போஸ்கோ’’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அம்மா –மகன் உள்ளிட்ட 7 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

-பா.பாரதி.