சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி

சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானை.. கொடூரன்களால் தவிக்கும் குட்டி

கோவை வனச்சரக பகுதிகளில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவதும் வேட்டையாடப் படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.   இந்த ஊரடங்கின் போது மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியளிக்கும் செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதில் சிறுமுகை பகுதியில் மட்டுமே 7 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு யானை உயிருக்குப் போராடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமுகை, பெத்திக்குட்டை வனப்பகுதி பெரிதும் முட்காடுகளைக் கொண்டதாக உள்ளதால், போதிய உணவு கிடைக்காமல் யானைகள் பெரிதும் அவதியுறுவதாக வனப்பணியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட, சுண்டப்பட்டி ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதாகப் புதனன்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அந்த யானை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “யானை இறந்து கிடந்த இடத்தை கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இருவர் ஆக்கிரமித்துப் பயிர் செய்து வந்துள்ளனர். அந்தப் பகுதிக்கு வந்த யானைக்கூட்டம் ஒன்றை விரட்டத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பெண் யானையின் இடது காது அருகே துளைத்துக்கொண்டு மூளை வரை இரும்புக் குண்டு சென்றதால் அது உயிரிழந்ததாக,  பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.  இந்த இருவரிடமிருந்தும் ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்கின்றனர்.

உயிரிழந்த பெண் யானைக்குப் பிறந்த குட்டி ஒன்று தற்போது சில பெண் யானைகள் கூட்டத்துடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுது.. அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யானைகள் வேட்டை முடிவுக்கு வராவிட்டால் கோவை வனச்சரக பகுதியைப் பார்த்து விலங்கு ஆர்வலர்கள் கண்ணீர் விடுவதைத் தவிர வேறுவழியில்லை

–  லெட்சுமி பிரியா

கார்ட்டூன் கேலரி