ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தாய் : தடயவியலில் உண்மை வெளியானது

ண்ணூர்

ள்ளக் காதலனை திருமணம் செய்ய ஒன்றரை வயதுக் குழந்தையைத் தாயே கொலை செய்தது தடயவியல் மூலம் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் கண்ணூர் அருகே பிரணவ் என்னும் 29 வயது இளைஞர் வசித்து வந்தார்.  இவருக்கு 22 வயதில் சரண்யா என்னும் மனைவியும் ஒன்றரை வயதில் வியான் என்னும் ஆண் குழந்தையும் உள்ளனர்.   கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.  தனது தாய் வீட்டில் வசித்து வரும் சரண்யா திடீரென கணவருக்கு  போன் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரணவ் தனது மாமனார் வீட்டுக்குச் சென்று இரவு அங்கே தங்கி உள்ளார்.  காலை எழுந்ததும் குழந்தை வியனைக் காணவில்லை என சரண்யா கூறி உள்ளார்.  குழந்தையை எங்கு தேடியும்  கிடைக்காததால் காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.  அவர்கள் தேடியதில் குழந்தையின் பிணம் கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் கிடைத்தது.

அந்த பிணத்தை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குழந்தை மரணம் அடைந்தது தெரிய வந்தது.   எனவே கணவன் மற்றும் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது பிரணவ் தன் மீதுள்ள கோபத்தால் குழந்தையை கொன்று இருப்பார் என காவல்துறையிடம் தெரிவித்தார்.   ஆனால் பிரணவ் இதை மறுத்தார்.

சரண்யாவின் நடவடிக்கைகளில் மாறுதல் உள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.   அதனால் சரண்யா அணிந்திருந்த உடைகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  அப்போது அவர் உடையில் கடல்நீர் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.   இதனால் அவரிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்தனர்.

விசாரணையில் சரண்யா தான் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் தனக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை திருமணம் செய்யவும் தாம் முடிவு செய்துள்ளதாக சரண்யா தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு குழந்தை இடையூறாக இருக்கும் என்பதால் அதைக் கொல்ல முடிவு செய்த சரண்யா பழியைக் கணவர் மீது சுமத்தக் கணவரை அழைத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.  காவல்துறையினர் சரண்யாவைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.