சென்னை: பெண்களுக்கு சொத்தா? முதிர்ந்த தாயை வெட்டிக்கொன்ற மகன்!

சொத்துப் பிரச்சினையில் தாய், சகோதரி இருவரையும் அரிவாளால் வெட்டிய மகன் காவல்துறையில் சரணடைந்தார். இதில் வயது முதிர்ந்த தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் ( வயது 77). இவருக்கு தேவராஜ் (வயது 53) என்கிற மகனும், விஜயலட்சுமி (வயது 55) என்பவர் உட்பட 3 மகள்களும் உள்ளனர்.

முத்தம்மாளுக்கு சொந்தமாக கூடுவாஞ்சேரியில் 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை நான்கு சரி பாகமாக பிரித்து மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு அளிக்கவேண்டும் என முத்தம்மாள்  விரும்பினார். ஆனால் தேவராஜோ, “பெண்களுக்கு எதற்காக சொத்தில் பங்கு? முழுதும் எனக்கே தர வேண்டும்” என்று வற்புறுத்தினார். ஆனால் இதற்கு முத்தம்மாள் உடன்படவில்லை.  அவர் விரும்பியபடியே, சமீபத்தில் சொத்து நான்கு சரிபங்காக பிரிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.

இதனால் தேவராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் முத்தம்மாளும், அவரது மகள்களில் ஒருவரான விஜயலட்சுமியும் கூடுவாஞ்சேரியிலிருந்து கோவூரில் வசிக்கும் இன்னொரு மகள் வீட்டுக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தனர்.

அங்கிருந்து கோவூர் செல்வதற்காக அய்யப்பந்தாங்கல் செல்லும் 166 எண் அரசுப்பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்துள்ளனர்.

அப்போது திடீரென பேருந்தின் உள்ளே ஏறிய தேவராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது வயது முதிர்ந்த தாய் முத்தம்மாள் மற்றும் உடன் பிறந்த சகோதரி விஜயலட்சுமி இருவரையும் கூர்மையான ஆயுத்தாதல் கொடூரமாக வெட்டினார். இதில் இருவரும் அலறியபடி ரத்தவெள்ளத்தில் பேருந்தில் விழுந்தனர்.

இருவரும் உயிரிழந்ததாக கருதிய தேவராஜ் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பேருந்துக்குள் பெண்கள் வெட்டப்படுவதைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர்,108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து   வரவழைத்தனர். அவர்கள் வந்து சோதித்ததில் முத்தம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.

உயிருக்கு போராடிய விஜயலட்சுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலை செய்த தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, அது ஆண்கள் பெரும்பாலோருக்கு உறுத்தலாகவே இருக்கிறது என்பதற்கு உதாரணம் இச்சம்பவம். பல ஆண்கள் இப்படி ஆயுத்தைதத் தூக்குவிதல்லையே தவிர “பெண்களுக்கு ( உடன் பிறந்த சகோதரிகளுக்கு) எதற்காக சொத்துரிமை” என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

ஆகவே சட்டம் மட்டும்போதாது.. சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேம்டுமென்றால் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவசியம்.