சிறுத்தை வாயில் இருந்து 18 மாத மகனை மீட்ட தாய்

ஜுனார், மகாராஷ்டிரா

ரு பெண் தனது 18 மாத மகனை சிறுத்தையின் வாயில் இருந்து மீட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே வில் இருந்து 90 கிமீ தூரம் உள்ள ஜுனார் பகுதியில்  தோல்வாட் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இந்த சிற்றூரில் திலிப் மற்றும் தீபாலி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 18 மாதத்தில் தியானேஸ்வர் என்னும் மகன் இருக்கிறான். இவர்கள் கரும்பு வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் தங்கள் வீடுகளுக்கு வெளியே படுத்து உறங்குவது வழக்கமாகும். அதன்படி திலிப் மற்றும் தீபாலி தங்கள் குழந்தையுடன் வெளியே படுத்து உறங்கி உள்ளனர். திடீரென சுமார் 1.30 மணி அளவில் தீபாலி சிறுத்தையின் குரலை கேட்டு கண் விழித்துள்ளார். அவர் அருகில் படுந்துக் கொண்டிருண்ட குழந்தையின் தலையை சிறுத்தை கவ்வியபடி இருந்துள்ளது.

                       தீபாலி

சுமார் 20 வயதே ஆன சிறு பெண்ணான தீபாலி கூச்சலிட்டபடி அந்த சிறுத்தையை தனது கைகளால் தாக்கி உள்ளார்.  குழந்தையின் தலையை விட்டு விட்டு சிறுத்தை தீபாலியின் கையை கடித்துள்ளது.  தீபாலியின் கூச்சலை கேட்டு ஊர்மக்கள் திரண்டதால் சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது.

குழந்தையின் கழுத்து, காது மற்றும் இடது கண் ஓரத்தில்  சிறுத்தையின் பல் தடயங்கள் பதிந்துள்ளன.

விவரம் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணிக்கு அங்கு விரைந்து வந்தனர். அந்த குழந்தையையும் தீபாலியையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரி ஏற்கனவே வெட்டவெளியில் உறங்கக் கூடாது என பலமுறை எச்சரிக்கை அளித்தும் கிராம வாசிகள் அதை கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். சிறுத்தையை தேடி பிடிக்கும் பணி நடந்து வருகிறது.