அதிகளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க மோட்டார் பொருத்தம்: பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தகவல்

அதிக அளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க வீட்டுக் குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பூந்தமல்லி பகுதியில் வீடுகளில் உள்ள குடிநீர் பைப்புகளில் சிலர் மோட்டார்கள் பொருத்தி அதிகளவு தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் பலருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதுபற்றி ஏராளமான புகார்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு வந்தது. இதனை தடுக்கவும், குடிநீர் வீணாகாமல் இருக்கவும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் தற்போது புதிதாக மீட்டர் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஒரு நபருக்கு 90 லிட்டர் தண்ணீர் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி கமிஷனர் டிட்டோ, “பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் தினந்தோறும் 57 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. சிலர் மோட்டார் வைத்து உரிஞ்சுவதால் சீராக தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், கடைகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியிருப்புவாசிகள் ரூ.12,500 பணத்தை பத்து மாத தவணையாக தவணை முறையில் செலுத்தலாம். பள்ளம் தோண்டி, பைப்புகள் புதைத்து குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்துவிடும். இணைப்பு வேண்டும் என்பவர்கள் தவணை முறையில் டெபாசிட் தொகையை செலுத்தினால் மட்டும் போதும்.

மேலும் அந்த இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதால் ஒரு நபருக்கு 90 லிட்டர் வீதம் அந்த வீட்டிற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுவரை வீடுகள் கடைகள் என 5 ஆயிரம் இணைப்புகள் உள்ளது. மேலும் 10 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வீடுகளுக்கும் சரிசமமாக தண்ணீர் விநியோகிக்கப்படும். இந்த பணிகள் முடிந்தவுடன் தெருக்களில் உள்ள தண்ணீர் குழாய்கள் அகற்றப்படும், மேலும் இந்த இணைப்பில் மீட்டர் பொருத்தப்பட்டு “புலோட் கண்ட்ரோல் வால்வு” உள்ளதால் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் அவர்களுக்கு குடிநீர் வருவது நிறுத்தப்படும்.

அதன் பிறகு நகராட்சி ஊழியர்கள் வந்து அந்த லாக்கை எடுத்தால் மட்டுமே அவர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் 7 நாட்களில் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் தண்ணீர் வீணாவது வெகுவாக குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி