விமர்சனம்: மொட்ட சிவா கெட்டசிவா – மொக்கை சிவா!

லமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தடையாகி வருமா இல்லையா என்று சந்தகத்திலேயே இருந்த “மொட்ட சிவா கெட்ட சிவா” ஒருவழியாக வந்தே விட்டது.

நேர்மையான காவல்துறை அதிகாரி சத்யராஜ்.  அதனாலேயே அவரும்.. அவரோடு மனைவி மகளும் பலியாகும் நிலை.

சத்யராஜ் மகன் ராகவா லாரன்ஸ் தீடீரென எங்கோ போய்.. திடுமென பெரிய ஆளாகி, அசிஸ்டென்ட் கமிஷனராக வருகிறார்.

நேர்மயாக வாழ்ந்து வீழ்ந்த அப்பாவைப்போல் இருக்கக்கூடாது. அத்தனை அட்டூழியங்களும் புரிந்து சிறப்பாக வாழ  வேண்டும் என்பதையே “கொள்கையாக” கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.   சென்னையின் முக்கிய தாதாவான ராணாவின் அனைத்து கிரிமினல் வேலைகளுக்கும் பக்க பலமாக இருக்கிறார்.

இந்த நிலையில், ராணாவின் தம்பி வம்சி கிருஷ்ணாவும், அவரின் நண்பர்களும் சேர்ந்து அப்பாவி பெண் ஒருவரை பலாத்காரப்படுத்தி கொலை செய்துவிடுகிறார்கள். அந்த பெண்மணியை தங்கையாக நினைத்து வாழ்கிறார் லாரன்ஸ். ஆகவே, அந்த பெண்ணின் மரணம், லாரன்ஸூக்குள் பெரும் மாறறத்தை ஏற்படுத்துகிறது.

“தப்பு பண்ணதெல்லாம் போதும்..இனி நல்ல போலீஸாக வாழ வேண்டும்” என்று முடிவெடுக்கிறார்.

நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி  என்று ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள். ஆனால் சீனுக்கு சீன் ராகவா லாரன்ஸ்தான் திரையை நிறைக்கிறார்.

பரபரவென்று ஆடுகிறார் படபடவென சண்டை போடுகிறார்… எல்லாம் ஓகேதான். ஆனால் காமெடியா பேசுவதாக நினைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவது எரிச்சலையே ஏற்படுத்துகிறது.  இதில் பஞ்ச் டயலாக்குகள் வேறு வதைக்கின்றன.

லாரன்ஸ் சிறந்த நடிகர்தான். ஆனால் அவருக்கு ஏற்ற கேரக்டரோ  கேரக்டரை சுழன்று வரும் சிறப்பான திரைக்கதையோ இல்லை.

லட்சுமி ராய், நிக்கி கல்ராணி ஆகியோர் வருகிறார்கள், ஆடுகிறார்கள் போகிறார்கள்.. அவ்வளவே.

வில்லன் அஷுடோஷ் ராணா…   நடிப்பிலும், உடல் மொழியிலும்  மிரட்டியிருக்கிறார். ஆனால்  அவருக்கான காட்சிகள் குறைவே.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார் சத்யராஜ். அவரது நடிப்புக்கு சொல்லவும் வேண்டுமா. ஆனால், இதே போன்ற காரெக்டர்களில் அவர் பலமுறை வந்துவிட்டதால் ரசிக்கமுடியவில்லை.

கோவை சரளாவும், சதீஷும் இருக்கிறார்கள். நகைச்சுவைக்காக சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் சிரிப்புக்கு பதிலாக எரிச்சலே வருகிறது.

 

நின்றால், உட்கார்ந்தால், பக்கவாட்டில் படுத்தால் என்று எதெற்கெடுத்தாலும் பஞ்ச் டயலாக்.

“என் வேகத்தைக் தாங்க மாட்டே….” என்று வில்லன் சவுண்ட் விட, பதிலுக்கு லாரன்ஸ் கத்துகிறார்: “உன் வேகத்த காட்ட  நான் என்ன  பெங்களூரு ஹை வேயா?”

யோசித்துப்பாருங்கள்.. இதையே கவுண்டமணி சொல்லியிருந்தால் “பக்” என்று சிரித்திருப்போம். லாரன்ஸ் சொல்லும்போது சிரிக்கவும் முடிவில்லை.. ரசிக்கவும் முடியவில்லை.

ஒளிப்பதிவு கண்ணைப் பறிக்கிறது. தெலுங்கு சினிமாவைப்போல் திரை முழுக்க வண்ணங்கள் துருத்தி நிற்கின்றன.

“ஆடலுடன் பாடலும்..” என்ற பழைய பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். கேட்க நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் தியேட்டர் அதிர்கிறது. மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை.

சண்டை காட்சிகள் நம்ப முடியாதபடி இருந்தாலும், பிரமிக்க வைக்கின்றன.

பெரிய நடிகர்கள், பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், ஈர்க்கும் ஒளிப்பதிவு.. இப்படி ப்ளஸ்கள் இருந்தாலும்  பல முறை பார்த்து சலித்த கதை, அதை சொன்ன விதமம் ரசிக்கும்படி இல்லை.

மொக்கை சிவா!

Leave a Reply

Your email address will not be published.