கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
டீவி சேனல்களில் பல மணிநேர நேரலைகளில், செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளார்கள் இடையே கேள்விகணைகளும் பதில்களும் தொடர்ச்சியாக பாய்ந்த நிலையில், கிளைமாக்ஸாக மூன்றே விநாடிகளில தரைமட்டமானது பதினோருமாடி கட்டிடம். சுற்றியிருந்தவர்கள், இப்படியொரு காட்சியை இதுவரை நேரில் கண்டதே இல்லை என்ற மெய்சிலிப்பில். ஆரவாரங்கள் விண்ணைப்பிளக்க, கிட்டத்தட்ட ஒரு உலக நிகழ்வாகவே மாறிவிட்டது.
ஆனால், சரிந்த கட்டிடம், சைலண்டாக சொன்ன விஷயங்கள் எத்தனை பேர் காதில் விழுந்தனவோ தெரியவில்லை.
சென்னை போரூரின் குன்றத்தூர் சாலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நியுயார்க் இரட்டை கோபுரம்போல் இரட்டை 11 மாடி குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்தபோது, தங்கள் பகுதியின் அடையாளமாக அவை இருக்கப்போவதாக அங்குள்ள மக்கள் நினைத்தனர். ஆனால் 2014 ஜூன் 28-ந்தேதி ஒரு கட்டிடம் திடீரென சரிந்து தரைமட்டாகி, தேசிய அளவில் பிரேக்கிங் நியூசாக அலறின. காரணம், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் 61 பேர் அப்படியே புதைந்து பலியானதுதான்.

அந்த கட்டிடம்...
அந்த கட்டிடம்…

வழக்கம்போல், எல்லா தரப்பிலிருந்தும் மோசமான கட்டுமானம், விதி மீறல்கள், அதிகாரிகள் லஞ்சம், அரசியல்வாதி பங்கு என கேள்விகளாய் பொங்கின. கட்டிட நிறுவனத்தின முக்கிய புள்ளிகள் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகஅரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஜூலை மாதம் ஒரு நபர் கமிஷனை அமைக்க, கமிஷனோ விசாரிக்க ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிக்கை கொடுத்தது. கட்டிடம் இடிந்ததற்கு 6 பேர் மீது குற்றம்சாட்டியது.. அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதையெல்லாம் வீணாக யோசிக்கக்கூடாது.
இடிந்த கட்டிடத்தின் பக்கத்தில் உள்ள இன்னொரு கட்டிடமும் ஆபத்தானது என்று சொல்லி அக்டோபரில் அதனை இடிக்க உத்தரவிட்டார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர். கட்டிட நிறுவனம் உயர்நீதிமன்றத்திற்கு ஓட, அங்கே அமோகமாக தடை கிடைத்தது. உச்சநீதிமன்றதில், தடை அகற்றப்பட்டு கட்டிடத்தை இடிக்க கடந்த மேமாதம் தீர்ப்பானது. இடிக்க உத்தரவிட்ட பிறகு ஆறுமாதங்கள் கழித்தே நவம்பர் இரண்டாம் தேதி தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இரட்டை கட்டிடங்களில் குடியிருப்புகளை வாங்க பணம் கொடுத்தவர்களின் தரப்பு என்ன கதி என யோசித்துபார்க்கவேண்டும்.
முதல்கட்டிடம் சரிந்தபோது, கட்டிட நிறுவனம், பணத்தை கொடுத்திருப்பவர்களுக்கு, ‘’ பயப்படாதீர்கள், உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்’’ என்று ஒற்றைவரி ஈமெயில் அனுப்பியதோடு சரி. அதன்பிறகு அவர்களை நிறுவனம் கண்டுகொள்ளவேயில்லை..
நொந்துபோய், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பல இடங்களில் உதவிக்கரம் கேட்டு முட்டி மோதியவர்களுக்கு எங்குமே உரிய பதில் கிடைக்கவேயில்லை..கடைசியில் வேறுவழியில்லாமல் வழக்கம்போல் இழப்பீடு விவகாரம், நீதிமன்றத்தில்போய் விழுந்திருக்கிறது.
தூசும், புகையுமாக..
தூசும், புகையுமாக..

அதாவது ஒரு கட்டிடத்தை இடிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றவே, பணபலத்தை எதிர்த்து 13 மாதங்கள் போராடவேண்டிய மோசமான நிலைமை. அதுவும் ஒரு மாவட்ட நிர்வாகத் தலைமைக்கே இந்தக்கதி..
அப்படியிருக்கும்போது, தலைக்கு சராசரியாக 60 லட்ச ரூபாய் என  70க்கும் மேற்பட்டோர் கொடுத்த சுமார் 45 கோடி ரூபாயில் எவ்வளவு திரும்ப கிடைக்கும் என்பதை விட எப்போது கிடைக்கும் என்பதுதான் பரிதாபத்துக்கு உரிய கேள்வியாக மாறிவிட்டிருக்கிறது.
பணம் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.. வாங்கியவர்களும் இருக்கிறார்கள்.. இருதரப்பும் இடையேயிருந்த கட்டடிடங்கள்தான் காற்றில் தூசாக கரைந்து காணாமல்போயுள்ளன..
தெளிவான விவாகரத்திற்கே நம் நாட்டில் உரிய நேரத்தில் தீர்வு கிடைப்பது, குதிரைகொம்பு ரகம். இந்தலட்சணத்தில்…….? மௌலிவாக்கம். எத்தனை நாள் புலம்பல்வாக்கமாக இருக்கப்போகிறதோ?