திருவனந்தபுரம்:

கேரளாவில்,கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,  நடமாடும் கொரோனா சோதனை மையத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.

கேரள மாநிலத்தில் இதுவரை 314 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த கலாம்சேரி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த  மருத்துவர் கணேஷ் மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடமாடும் கொரோனா பரிசோதனைக் கூடத்தை வடிவமைத்துள்ளனர்.

ஏற்கனவே அங்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய வசதியாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 2 நிமிடத்தில் ஒருவருக்கு ரத்த மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நடமாடும் ஆய்வுக்கூடம்,  மூன்று பக்கமும் மூடப்பட்டு, ஒரு பக்கம் மட்டும் கண்ணாடியிலான சுவர் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.  கண்ணாடி சுவரின் வெளிப்புறத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும், கண்ணாடி சுவரில் இரண்டு கையுறைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக மருத்துவப் பணியாளர் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்க முடியும்.

ஒவ்வொரு முறை பரிசோதனை நடத்தப்பட்டதும், கையுறைகளும், கேபினும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டபிறகு, அடுத்த நபருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

,இந்த பரிசோதனைக்கூடத்தை, வாகனங்களில் எடுத்துச்சென்று, தேவையான இடங்களில் வைத்து பரிசோதனை செய்ய முடியும். தற்போது 2 நடமாடும் பரிசோதனைக்கூடம் உபயோகத்தில் இருப்பதாகவும், விரைவில் மேலும் பல ஆய்வுக்கூடம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.