டெல்லி:

ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக பல மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வ காணும் வகையில் மத்திய அரசின் பொதுப் பட்டியலில் தண்ணீரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே ஆறுகளில் நீர் பங்கீடு செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது. அதனால் தண்ணீரை பொதுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நீர் பங்கீடு பிரச்னைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா இடையே காவிரி பிரச்னை உள்ளது. பஞ்சாப்&ஹரியானா இடையே சட்லஜ் நதி பிரச்னை உள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா இடையில் கிருஷ்ணா நீர் பிரச்னை உள்ளது. அரசியலமைப்பு சாசனப்படி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஆறுகள் உள்ளது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல், நீர் பங்கீடு போன்றவை இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் எழுகிறது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர் அல்லாதவர்கள், மூத்த அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தண்ணீரை பொதுப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். நாடு முழுவதும் தீர்க்க முடியாத பிரச்னையாக ஆற்று நீர் பிரச்னை உள்ளது.

‘‘தண்ணீரை பொதுப் பட்டியலுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து இதற்கு சட்ட வரைவு தயார் செய்ய வேண்டும்’’ என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். இதனால் தண்ணீர் விரைவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும் சூழல் நிலவுகிறது.