சௌதி அரேபியா : 35 வருடங்களுக்கு பின் திரையரங்கு  தொடக்கம்!

ரியாத்

நேற்று முதல் சௌதி அரேபியாவில் 35 வருடங்களுக்குப் பின் திரையரங்கம் இயங்கத் தொடங்கி உள்ளது.

இஸ்லாமிய நாடான சௌதி அரேபியாவில் திரையரங்குகள் 35 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டன.    அன்றிலிருந்து திரைப்பட ரசிகர்கள் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி அல்லது வீடியோ மூலம் திரைப்படங்களை கண்டு ரசித்து வந்தனர்.   தற்போது சௌதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் பல புதிய மாறுதல்களை கொண்டு வந்துள்ளார்.    பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம்.  விளையாட்டுப் போட்டிகளை பார்க்க பெண்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல மாறுதல்கள் அரசால் அறிவிக்கப் பட்டுள்ளன.

அந்த வரிசையில் சௌதி அரேபியாவின் தலை நகரான ரியாத் நகரில் நேற்று திரையரங்கு ஒன்று தொடங்கப் பட்டுள்ளது.   அத்துடன் விரைவில் நாடெங்கும் திரையரங்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.   வரும் 2030ஆம் வருடத்துக்குள் சுமார் 350 திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.   தற்போது சௌதி அரேபியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஐந்து திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் முதன் முதலாக நேற்று ”பிளாக் பேந்தர்” ஆங்கிலத் திரைப்படம் திரையிட்பட்டது.   30 வயதுக்குட்பட்ட பலருக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.   இந்தத் திரைப்படத்தை சௌதி அரேபிய அரசின் தணிக்கைக் குழு 30 விநாடிகள் வெட்டுடன் அனுமதி அளித்துள்ளது.     மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த திரைப்படத்தை நேற்று கண்டு களித்தனர்.